நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

Print

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும்.

நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது.

* ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born digital documents) போன்ற பல்லூடகச் சாத்தியங்கள் மூலமான ஆவணப்படுத்தல்

* பல்லூடக ஆவணங்களை பாதுகாத்தல், இலகுவாகக் காட்சிப்படுத்தல், தேடிப் பயன்படுத்தல் (Preservation, Search and Discovery Mechanism for Multimedia Content)

* நேரடிப் பயனர் பங்களிப்பின் ஊடான உள்ளடக்க வளர்ச்சி (Collaborative/Crowd-sourced Content Development)

* ஆய்வுப் பொருள்சார் சேகரங்கள் (Thematic Research Collections)

* சேகரங்கள் – ஒரு உறுப்பு பல சேகரங்கள் (Collections – one to many mapping)

* பட்டியலாக்கம் (Cataloging)

2005 தை மாதம் தொடக்கம் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தி வரும் நூலக நிறுவனமானது அச்சில் பதிக்கப்பட்ட எழுத்தாவணப் படைப்புக்களையே (published works) பெரும்பாலும் பாதுகாத்து அணுக்கப்படுத்தி வந்துள்ளது.  அவ்வகையில் 2016 மார்கழி வரை 30,000 க்கும் மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

அச்சு எழுத்தாவணங்களைத் தாண்டி பல்லூடகங்களை ஆவணப்படுவது அவசியம் என்பது 2011 வியூகத் திட்டமிடல் ஊடாக அறியப்பட்டது.  பல்லூடக வளங்களைச் சேகரித்தல், ஒழுங்குபடுத்தல், பாதுகாத்தல், காட்சிப்படுத்தல், தேடல் வசதிகளைக் கொண்ட தளத்தை நிறுவும் முயற்சிகள் 2011 காலப் பகுதியில் தொடங்கிவிட்டது.  எனினும் பல்வேறு நுட்பம், நிறுவனம் சார் காரணங்களால் பல்லூடகத் தளத்தை வெற்றிகரமாக நிறுவும் பணி அண்மைக் காலம் வரை சாத்தியப்படவில்லை.   கட்டற்ற மென்பொருளும் (Free and Open Source Software – FOSS) கட்டற்ற நிரலாளர்களின் (FOSS Developers) உதவியும் இந்தத் தளத்தை சாத்தியப்படுத்தியது.  இது தொடர்பான நூலக நிறுவனத்தின் விரிவான அறிக்கை ஒன்றை இங்கு பார்க்கலாம்:

பல்லூடக ஆவணகத் தளச் (Multimedia Archiving Platform) செயற்றிட்டக் கற்றல்கள்

இந்த ஆவணகத் தளத்தில் நிகழ்படங்கள், ஆவணப் படங்கள், குறும்படங்கள், ஒலிப் பதிவுகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள், ஒளிப்படங்கள், வரைபடங்கள், அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், ஏட்டுச் சுவடிகள் உள்ளிட்ட சகலவிதமான ஆவணங்களும் இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆவணகத்தினைப் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை noolahamfoundation@gmail.com க்கு பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம். உங்களிடம் உள்ள அரிய பல்லூடக ஆவணங்களைப் பகிர்ந்தும் புதிய பல்லூடக ஆவணப்படுத்தலில் இணைந்தும் நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தற் செயற்பாடுகளில் நேரடியாகப் பங்களிக்க வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
ஊர் கூடி ஆவணப்படுத்துவோம்.