நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

Published on Author Noolaham Foundation

new members

ஈழத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தலில் விரிவான ஈடுபாடும், அனுபவமும், ஆற்றலும் உள்ள மூன்று புதியவர்கள் நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையில் தெரிவுசெய்யப்பட்டு இணைந்துள்ளார்கள்.  அவர்களை நாம் அன்புடன் வரவேற்கிறோம்.

இ. மயூரநாதன்
இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) முன்னோடிப் பங்களிப்பாளர் ஆவார். இலங்கையில் வண்ணார்பண்ணையில் பிறந்து, கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுங்காலம் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்று யாழில் மீள் குடியேறியுள்ளார். 2003 ஆம் ஆன்று தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடக்கி வைத்ததில் இருந்து இன்று வரைக்கும், தமிழ் விக்கிப்பீடியாவிற்கும், அதன் உறவுத்திட்டங்களுக்கும் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். கூட்டாக்கச் செயற்திட்டங்களை ஒருங்கிணைப்பதில், தொலைநோக்கான முறையில் நெறிப்படுத்துவதில் ஆழ்ந்த அனுபவம் உடையவர். இவரது தமிழுக்கான சிறந்த பங்களிப்பினைக் கெரவித்து கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (tamilliterarygarden.com) 2015 இக்கான இயல் விருது இவருக்கு வழங்கப்பட்டது. நூலகத்தின் தொடக்க காலம் முதலே நூலகப் பணிகளை அவதானித்து வருபவர், பயன்படுத்தி வருபவர்.

 

சஞ்சீவி சிவகுமார்
சஞ்சீவி சிவகுமார் , இலங்கை, கல்முனையைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு பெற்றவர். இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இலங்கையில் நடந்த முதலாவது தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டைறையை ஒருங்கிணைத்தவர். கூட்டாக்கச் செயற்திட்டங்களில் (collaborative community projects) விரிவான அனுவபவம் உடையவர். நூலக மலையக ஆவணகத்தில் 2016 மத்திய பகுதியில் இருந்து பங்களித்து வருகிறார்.

 

சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்
சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகர். ஆவணமாக்கலில் பட்டம் பெற்றவர். 30 ஆண்டுகளுக்கு மேலேன நூலக அனுபவமுள்ளவர். நூலக விழிப்புணர்வு நிறுவகத்தினை 2005 முதல் இயக்கி வருபவர். நூலகத் தகவல் அறிவியல் தொடர்பில் தமிழில் முதன்மை உசாத்துணை வளங்களைத் தந்தவர். துறைசார் கலைக்களஞ்சியம், சொற்களஞ்சியம் ஆகியவற்றோடு தகவல் வளங்களும் சேவைகளும், தகவல்வள முகாமைத்துவம் ஆகிய சேகர அபிவிருத்தி தொடர்பான இரு நூல்களும் இவருடையவை. இலங்கையின் நூலகவியல் சார்ந்த முக்கிய அமைப்பான இலங்கை நூலகச் சங்கத்தின் (SLLA) அடுத்த தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பல்வேறு நூலகவியல், ஆவணமாக்கச் செயற்பாடுகளுக்கு ஆலோசகராகச் செயற்பட்டுள்ளார். நூலக நிறுவனத்திற்கு ஆரம்ப காலத்திலிருந்தே பங்களித்து வரும் இவர் நிறுவனத்தின் இரண்டாவது செயற்றிட்டமான யாழ்ப்பாண மின்னூலாக்கச் செயற்றிட்டம் 2006 இனை முன்னெடுத்தவர். நூலகப் பகுப்பாக்கம் தொடர்பான செயற்பாட்டினையும் முன்னெடுத்தவர். நூலகவியல் சார்ந்த ஆலோசனைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருபவர். 2017 இல் தொடங்கப்பட்டுள்ள தகவலறிவியல் ஆய்விதழைப் பிரதம ஆசிரியராக முன்னெடுத்தும் வருகிறார்.

இவர்களைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய:

https://github.com/noolahamfoundation/governance/wiki/2017-RB-Call-for-Nominations

 

தற்போது நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபை உறுப்பினர் விபரங்கள் பின்வருமாறு:

* இ. பத்மாநாபஐயர்
* தி. கோபிநாத்
* சி. சேரன்
* இ. நற்கீரன்
* சி. சுதர்சன்
* வ. பவகரன்
* சி. உமாதரன்
* இ. மயூரநாதன்
* ச. சிவகுமார்
* அ. சிறீகாந்தலட்சுமி

இற்றைப்படுத்தப்பட்ட வழிகாட்டுநர் சபை Terms of Reference:

https://docs.google.com/document/d/1UMo05fUzjMJFdnThg4pxX-s0p72rRLxi-ENA74I2YeA/edit?usp=sharing