காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது

Published on Author தண்பொழிலன்

“சிங்களத்தையும் தமிழையும் இந்த நாட்டின் உத்தியோக பாஷைகளாக்க இலங்கை அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று இலங்கைப் பிரதமர் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் கூறியதை எதிர்த்து வெகுசீக்கிரத்தில் அரசாங்க பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்படும்”

இந்தச் செய்தியைப் படித்து நீங்கள் ஒன்றும் குழப்பமடையத் தேவையில்லை. இது சமகாலச் செய்தி அல்ல.செய்தியில் கூறப்படும் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல. இலங்கையின் மூன்றாவது பிரதமர். ஆம். சரியாக அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் பழம்பெரும் பத்திரிகைகளில் ஒன்றான சுதந்திரனின், 1954 அக்டோபர் 10 வார இதழில் வெளியான பிரதான செய்தியின் ஒரு பாகத்தைத் தான் மேலே படித்தீர்கள்.

 Sutantiran1

சுதந்திரன் 1947இலிருந்து 1983 வரை வெளியான புகழ்பெற்ற பத்திரிகை. 1977 வரை கொழும்பிலும், பின் ஆறு ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் வெளியான சுதந்திரனில், இலங்கை வரலாற்றின் மிக முக்கியமான காலவேளையில் இடம்பெற்ற சகல விவரங்களும் பதிவாகி இருக்கின்றன.

மேற்படி செய்தியில் இலங்கையின் அதிகாரபூர்வ மொழிகள் பற்றி  ஏற்பட்ட அரசியல் சலசலப்புகள் விலாவாரியாகச் சொல்லப்படுகின்றன. அதேபோல் 9ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் உரையும் முக்கியமானது. இந்த உரையில், 1948 குடியுரிமைச் சட்டத்தின் பின் நாடற்றவர்களாக மாற்றப்பட்ட மலையகத்தமிழரை மீளவும் இந்தியாவுக்கு அனுப்பும் இலங்கை அரசின் திட்டத்தை அவர் கடுமையாகச் சாடுகிறார்.

Sutantiran3

மேற்படி இரு செய்திகளும் வெளியான காலகட்டத்தின் பின்னணியில் இதை வாசிக்கும் போது, நமக்கு தெளிவான சித்திரம் ஒன்று கிடைக்கும். 1954 இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்து வெறும் ஆறு ஆண்டுகளே கடந்திருக்கின்றன.  இலங்கையின் தலையெழுத்தையே மாற்றிய தனிச்சிங்கள சட்டம் அமுலாக இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், இத்தகைய  செய்திகள் வெளிவருகின்றன என்பதன் ஊடாக நாடு எத்தகைய கொதிநிலையில் இருந்திருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

Sutantiran4
அரசியல் நிலைமைகள் மட்டுமல்ல. பதினாறு பக்கங்கள் கொண்ட இந்தப் பத்திரிகை, 1950களில் கலை, கலாசார, பண்பாடு, பொழுதுபோக்குகள் என்பன எவ்வாறு இருந்தன முதலான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் களமாகவும் இது அமைகின்றது. வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர், பானுமதியின் “மலைக்கள்ளன்”, சிவாஜியும் எம்ஜிஆரும் சேர்ந்து நடித்த “கூண்டுக்கிளி”, எம்.கே.ராதாவின் “நல்லகாலம்”, இனி வெளியாகப்போகும் “தூக்குதூக்கி” என்பவற்றின் விளம்பரங்கள். அவை ஓடிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் ராணி, திருகோணமலை ஜோதி, மட்டக்களப்பு விஜயா, வெள்ளவத்தை ரொக்சி முதலான திரையரங்குகள். இன்னொரு இடத்தில் கோபால் பல்பொடி விளம்பரத்தைக் காணும் போது புன்னகை அரும்புகிறது.

 

இன்னும் சில சுவாரசியமான செய்திகள் இந்த இதழில் உண்டு. அண்ணாவும் பெரியாரும் பிரிந்துநிற்பதை இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்திடம் கவலையோடு விமர்சிக்கிறார்  கலைவாணர். பாரதியாரின் பாடல்கள், அதே ஆண்டு மறைந்த கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை மீதான நினைவஞ்சலி, இன்றைய ரஷ்யா – அன்றைய சோவியத் யூனியனில் இடம்பெற்ற இந்திய சினிமா விழா, அக்காலத்தமிழில் செவியின் உடற்கூற்றியலை விவரிக்கும் கட்டுரை என்பன படிக்கப் படிக்க சுவை!

மிகப்பழைய பத்திரிகை ஒன்றை அதன் இயல்பான வடிவிலேயே படிக்கும் வாய்ப்புக்கிடைப்பது பூரிக்க வைக்கும் தருணங்களில் ஒன்று. இலங்கையின் மிகப்பெரும் இணையத் தகவல் சேகரமான நூலகம் அந்த வாய்ப்பை வாசகர்களான உங்களுக்கு வழங்கி இருக்கிறது. இந்த இதழ் மட்டுமன்றி, 1952 முதல் 1982 வரை வெளியான சுதந்திரனின் சுமார் 1000 இதழ்கள் இதுவரை நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இணைப்பில் மேற்படி சுதந்திரன் இதழை நீங்கள் படித்துப் பார்க்கலாம். எல்லா சுதந்திரன் இதழ்களையும் படிக்கக்கூடிய நூலகப் பகுப்பு இங்கு உள்ளது.

வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய அரசியல் சமூகச் சூழ்நிலைகளையும்  அறிய பத்திரிகைகள் முதலாம் நிலை மூலங்களாக (primary sources) விளங்குகின்றன.  அறுபத்து மூன்றாண்டுகள் பழைமையான இந்த சுதந்திரன் இதழில் வெளியான கீழுள்ள செய்தித்துணுக்கு இன்றைய சூழ்நிலைக்கும் பல தகவல்களை வழங்கி நிற்கின்றது.  பத்திரிகைகளை ஆவணப்படுத்தல் ஒரு சமூகத்துக்கு காலக் கண்ணாடியைப் பிடிப்பது  போலாகும்.

Sutantiran2