வன்னியில் அழிந்த நூல்கள்

Published on Author Noolaham Foundation

– தீபச்செல்வன்

வன்னியில் உள்ள பிரதேச நூலகங்களின் நூல்கள் முழுவதும் கடந்த யுத்தத்தில் அழிந்து போயுள்ளன. இதனால் மீள்குடியேறிய இடங்களில் நூலகங்களை மீண்டும் திறப்பதில் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மீள்குடியேறிய மக்களுக்குரிய வாசிப்பிற்கும் புதினங்களை அறியவும் இவை பாரிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சியில் ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்ற பொழுது நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றன கிடைப்பதில்லை என்று அந்தப் பகுதி மாணவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள நூலகங்கள் அழிந்து போயிருப்பதால் குறித்த பத்திரிகைகளை வாசிக்கும் வசதி இல்லாமல் மக்கள், முக்கியமாக மாணவர்கள் சிரமங்களை எதிர் கொள்ளுகிறார்கள்.

வேரவில் இந்து மகா வித்தியாலயம் என்ற பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் பேசினார். “எப்பொழுதாவது சில பத்திரிகைகள் வருகின்றன. அதுவும் கசங்கி கிழிந்து தொங்கியபடிதான் வருகிறது. இன்று படிக்க வேண்டிய புதினத்தை சில நாட்கள் பிந்தித்தான் படிக்க முடிகின்றது. சில ஜனரஞ்சகப் பத்திரிகைகள் கிடைக்கின்றன. அவை சமூக அரசியல் பொருளாதார வாழ்க்கை நிலவரங்களைப் பற்றி எமக்கு ஒன்றையும் கொண்டு வருவதில்லை. சினிமா. பாலியல். பொழுது கழித்தல் என்று எங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வகையில்தான் வருகிறது. அண்மையில் எங்கள் பிரதேசம் பற்றி எங்களைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என்று அறிந்த பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து சொல்லிவிட்டுத்தான் ஒரு பத்திரிகை எடுத்தோம்”     என்று குறிப்பிட்டார்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச பொதுநூலகத்தில் இருந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் அழிந்து போயிருப்பதாக கரைச்சிப் பிரதேச விசேட ஆணையாளர் பொன். நித்தியானந்தன் என்னிடம் குறிப்பிட்டார். சில நாளிதழ்களுடன் தங்களிடம் இருந்த 20 புத்தகங்களைக் கொண்டும் பிரதேச சபை அலுவலகத்தில் உள்ள சிறிய மண்டபத்தில் மீண்டும் கிளிநொச்சி பிரதேச நூலகத்தை அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள். 155ஆம் கட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட கிளிநொச்சி பிரதேச நூலகம் சிதைவடைந்த நியைலில் அழிவின் எச்சமாக இருக்கிறது. அதை ஒரு ஆளும் கட்சி அரசியல்வாதி தனது கட்சி அலுவலகமாக பயன்படுத்த முனைகிறார்.
அதைத் தவிர கரைச்சிப் பிரதேசத்தில் இருந்த வட்டக்கச்சி பிரதேச நூலகம், முரசுமோட்டை பிரதேச நூலகம், ஜெயந்திநகர் பிரதேச நூலகம், ஸ்கந்தபுரம் பிரதேச நூலகம், முதலியவற்றின் சுமார் லட்சக்கணக்கான பொறுமதி மிக்க நூல்கள் அழிந்து போயுள்ளன. இந்த தகவல் அறிவுத்தளத்திலும் வாசிப்பு தளத்திலும் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

கிளிநொச்சி ஜெயபுரம் மகா வித்தியாலயம் என்ற பாடசாலையைச் சேர்ந்த மூத்த ஆசிரியர் ஒருவர் கூறியபொழுது “வன்னியில் காலங்காலமாக நடந்த அழிவுகள், போராட்டங்கள், வாழ்க்கைகள் பற்றி பல நூல்கள் எழுந்தன. கொப்பித்தாள்களிலும் சாதாரணமான தாள்களிலும் எளிமையாக பதிப்பிக்கப்பட்ட அந்த நூல்களையும் எங்களுடன் யுத்தம் அழித்து விட்டது. அவை சாதாரண விடயங்கள் அல்ல. சரித்திர பூர்வமாக நிலைக்க வேண்டியவை. எங்கள் அனுபவங்கள். அவற்றின் மூலப் பிரதிகளைத் தேடி மீண்டும் பதிப்பித்து எமது சந்ததிக்கு வாசிக்க கையளிக்க வேண்டும். இந்தச் சூழலில் இருந்து கொண்டு நாம் இழந்த புத்தகங்களை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இதைப்போல பூநகரியில் உள்ள வாடியடி பிரதேச நூலகம், ஜெயபுரம் பிரதேச நூலகம் முதலியவற்றின் நூல்களும் அழிந்து போன காரணத்தினால் அந்த நூலகங்கள் இயங்கமுடியாத நிலையில் உள்ளதாக பூநகரிப் பிரதேசசபைப் பிரதேசத்திலிருந்து அறியமுடிந்தது. தொடர்புகள் குறைந்த நிலையில் பின் தங்கிய இந்தப் பிரதேச மக்கள் மாணவர்கள் அடங்கிய வாசகர்களுக்கு இந்த நூலகங்கள் பெரும் உதவி புரிந்துள்ளன.

கருக்காய்த்தீவு என்ற இடத்தில் வசிக்கும் உயர்தர வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் இந்த விடயம் குறித்து குறிப்பிட்டார். “நாங்கள் அதிகம் அதிகம் நூலகங்களைத்தான் நம்பியிருந்திருக்கிறோம். பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், பத்திரிகைகள், தகவல்கள் என்பவற்றை நூலகங்களில்தான் படித்து வந்தோம். வீட்டில் படிக்க முடியாத சூழல் பகலில் மாலை நேரங்களில் இருக்கும் பொழுது நூலகத்திற்கு சென்று படிப்பது ஒரு மாற்றமான சூழலாக இருந்தது. படிக்கவும் ஆர்வமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி ஒரு சூழல் இல்லை. வன்னியில் அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்’’     என்றார்.

வன்னியில் இப்படி நூற்றுக்கு மேற்பட்ட நூலகங்கள் அழிந்ததோடு பல லட்சம் நூல்கள் அழிந்து விட்டன. குறிப்பாக உலகின் முக்கியமான வாசிக்க வேண்டிய நூல்கள் பல இந்த நூலகங்களில் இருந்தன. அத்தோடு வன்னியின் போர் அவலம் போராட்டம் சார்ந்த பதிவுகள் கொண்ட பல நூல்கள் இந்த யுத்தத்தில் அழிந்து விட்டன.

கிளிநொச்சி நூலகத்தில் பழைய பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரச ஊழியர் ஒருவருடன் இதைப் பற்றிக் கதைத்தேன். “முன்பு நடந்த யுத்தங்களில் நூல்களைத் தூக்கிக் கொண்டுதான் ஓடினேன். புதுக்குடியிருப்பில் கொண்டு போய் வைத்திருந்தேன். எனது வீட்டில் பாதி நூலகமாக இயங்கிக் கொண்டிருந்தது. நூலகங்களின் நூல்களையும்கூட ஏற்றிக் கொண்டுதான் ஓடினார்கள். அறிவமுது புத்தகக் கடையில் பல அரிய நூல்கள் இருந்தன. அறிவமுது என்ற அந்த நூல் விற்பனை நிலையம்  வன்னியில் பல பாகங்களிலும் இருந்தன. அவற்றில் பலவற்றை வாசிக்க வாங்கியிருந்தேன். அவ்வளவு நூல்களும் அழிந்து விட்டன. இவ்வளவு  வயதிலும் என்னால் வாசிக்காமல் இருக்க முடியவில்லை. இப்பொழுது கிடைத்த பத்திரிகைகளை திரும்பித் திரும்பி வாசிக்கிறேன்”    என்றார்.

ஈழத்தில் யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்து நூலகங்களும் நூல்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழர்களின் அழிப்பின் அடையாளமாக யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் இருப்பை அழிக்க படையெடுப்பவர்கள் இந்த உத்தியை கையாளுகிறார்கள். வரலாற்றையும் இனத்தின் இருப்பையும் சிதைக்கும் அறிவியல் கொலையை படையெடுப்பவர்கள் நிகழ்த்துகின்றனர். பாடசாலை களில் இருந்த பல நூல்கள் அழிந்து விட்டன என்பதை வன்னியில் உள்ள பாடசாலை அதிபர்கள்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். மொத்தத்தில் பிரதேச கிராம நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், தனியார் வீட்டு நூலகங்கள் முழுவற்றிலும் இப்படி நூல்கள் அழிந்து போயிருக்கின்றன.

போராளி எழுத்தாளர்கள் பலர் எழுதிய நூல்களும் வன்னியுத்த்தில் அழிந்துள்ளன. சில நூல்கள் அங்காங்கே பாதுகாப்பாக உள்ள பொழுதும் பல நூல்களை மீளப் பெற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. வன்னியில் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட பல பதிவுகள் இவ்வகையில் அழிந்து போயுள்ளன. போராளி எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பிற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் என்பன அழிந்துவிட்டன. பாதைகள் மூடுண்ட காலத்தில் வெளியான ஈழநாதம் பத்திரிகையின் பிரதிகளை முழுமையாக இழந்துவிட்டோம். அவை போர்க்கால வாழக்கைகையும் போராளிகளின் செயற்பாடு களையும் பதிவு செய்திருந்தன. ஈழநாதத்தில் போர்க்காலம் சார்ந்து வந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள், புகைப்படங்கள் எவற்றையும் இப்பொழுது பெற முடியாது. எல்லாவற்றையும் யுத்தம் அழித்து விட்டது.

எமது பிரதேசங்களில் உள்ள நூலகங்களுக்கும் பாடசாலை நூலகங்களுக்கும் மீண்டும் நூல்கள் பெருக எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், கொடையாளர்கள் முன்வர வேண்டும். அவர்கள் செய்யும் சிறிய உதவிகள் நிச்சயம் வாசகர்களின் வாசிப்புத் தேவையைப் பூர்த்தி செய்யும். புலம்பெயர்ந்த உறவுகள் எமக்கான புத்தகங்களை அன்பளிப்புச் செய்ய வேண்டும். ஏனென்றால் சிதைவடைந்த எமது சமூகம் மீண்டும் தளிர்த்து வலிமைபெற வாசிப்பும் சிந்தனையும் கல்வியும்தான் ஆதாரமாக அமையும்.  போரால் மக்கள்  நலிவடைந்துள்ள இன்றைய நிலையில் வாசிப்பு அவசியமானது.

நூல்களின் அழிவும் ஆவணங்களின் அழிவும் என்னையும் கடுமையாக பாதித்திருக்கிறது. வீட்டில் சேர்த்து வைத்திருந்த எல்லா நூல்களும் யுத்தத்தில் அழிந்து விட்டன. என்னைப் போல பல நண்பர்கள் தங்கள் நூல்களை யுத்தத்தில் இழந்து வி;ட்டார்கள். நூல்களின் அழிவு என்பது வரலாற்றின் அழிவாகவும் வாழ்வின் அறிவின் அழிவாகவும் இனத்தின் அழிவாகவும் சம்பவித்திருக்கிறது. மீண்டும் வன்னியில் பிரதேச நூலகங்களை உருவாக்கி வாசகர்களுக்குத் தேவையான நூல்களை வழங்கி அவர்களின் வாசிப்புத் தேவையை நிறைவேற்ற வேண்டும் இது எமது சந்ததிகளுக்குச் செய்யக்கூடிய கடமையாகவும் உள்ளது.