எரிக்கமுடியாத நூலகம்

Published on Author Noolaham Foundation

(குமுதம் தீராநதி மார்ச் 2012)


” எனது தந்தையர் நாடு இறந்துவிட்டது

அவர்கள் புதைத்தார்கள் அதை

நெருப்பில்

 

நான் வாழ்கிறேன்

வார்த்தை

என்ற என் தாய் நாட்டில் “

ஜெர்மனியைச் சேர்ந்த ரோஸ் ஆஸ்லேண்டர் ( 1901-1988) என்ற கவிஞர் எழுதிய இந்தக் கவிதை யுத்தத்தால் சிதைக்கப்படும் எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தக்கூடியது. வீடு தகர்க்கப்படும்போது, சொந்த நிழலும்கூட எரிந்துபோய்விடும்போது,நாடென்று உரிமை பாராட்ட எதுவும் இல்லாமல்ஆகிவிடும்போது ஒரு மனிதனிடம் எஞ்சியிருப்பது சொல் மட்டும் தான். அவன் அதைக்கொண்டு முதலில் ஒரு இருப்பிடத்தை உருவாக்குகிறான், மரங்களையும், கனிகளையும்,பறவைகளையும் வானத்தையும் சொற்களால் படைக்கிறான். பின்னர் ஒரு நாட்டையே உருவாக்குவது அவனுக்கு சாத்தியமாகிறது. ’மௌனத்தில் உறைந்திருக்கிறது வரலாறு,அந்த வரலாற்றை மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டே இருக்கிறது வார்த்தை.’

புத்தகங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதை எரிக்கிற மூடத்தனமும் இருந்து வந்திருக்கிறது.மதத்தின் பெயரால், அதிகாரத்தின் பெயரால் வரலாறு நெடுக லட்சக்கணக்கான நூல்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் அறிவாற்றலுக்கு அடையாளமாகத்  திகழ்ந்த நாளந்தாவின் நூலகம் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால் எரியூட்டப்பட்டபோது அந்தத் தீ பல மாதங்கள்வரை அணையாமல் எரிந்துகொண்டே இருந்ததென வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள்.நூல்களின்மீதான வெறுப்பு அறிவு குறித்த அச்சத்திலிருந்து எழுகிறது.நூல்களை எரிப்பதன்மூலம் அறியாமை இருளைப் பெருகச்செய்யவேண்டும் என்பதே ஆதிக்கவாதிகளின் நோக்கம். ஆனால் ஒரு நூலை எரிக்கும்போது அதிலிருந்து எழும் புகை எரிப்பவனின் நெஞ்சுக்குள் புகுந்து அவனது மூளையை மங்கச் செய்கிறது. ஏற்கனவே அவனுள் இருக்கும் இருள் இன்னும் அடர்ந்து வெளியெங்கும் பரவுகிறது. அதில் சூரிய கிரணங்களும் மறைந்து போய்விடுகின்றன. நூல்களை எரிக்கும் நாட்டில் எப்போதும் இரவுதான். நிலவுகூட இல்லாத இரவு.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த யாழ் நூலகத்தில் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓலைச்சுவடிகளும் அங்கு பாதுகாக்கப்பட்டிருந்தன. சிங்களப் பேரினவாதிகள் அதை தீயிட்டுக் கொளுத்தினார்கள். இருபதாம் நூற்றாண்டின் இனவெறிக் கொடுமைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்துவிட்டது அந்த நிகழ்வு. மூன்று நாட்கள் அந்த நூலகம் எரிந்துகொண்டே இருந்தது. அதைப் பார்த்த மாணவர்களும் இளைஞர்களும் இனி இந்த நாட்டில் சமாதானத்தோடு வாழமுடியாது என்று முடிவெடுத்ததில் வியப்படைய எதுவுமில்லை.

ஈழ மக்களின் நினைவில் யாழ் நூலக எரிப்பு ’சுட்ட வடுவாக’ நிலைபெற்றுவிட்டது. எனினும் வரலாற்றின் முரண்நகை கொடுமையானது. எந்தவொரு அநீதியைப் பார்த்துக்  கிளர்ந்தெழுந்து இளைஞர்கள் போராளிகளாக மாறினார்களோ அதே கொடுமையை அவர்களே செய்யும் நிலை ஏற்பட்டது. பேரினவாதிகள் நூலகத்தை எரித்தார்கள். போராளிகள் எரிப்பதற்கு நூலகம் எதுவும் எஞ்சியிருக்கவில்லை,எனவே படைப்பாளிகளே தமது படைப்புகளை எரிக்கும் நிலையை அவர்கள் உருவாக்கினார்கள்.

யாழ் நூலகம் எரியுண்டபோது அதைக் கண்டு குமுறியவர்கள் மீண்டும் அப்படியொரு நூலகத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்று தமக்குள் உறுதியேற்றிருப்பார்கள். அந்த விருப்பம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஈடேறியது என்றாலும், ’இது எத்தனை நாளைக்கு ?’ என்ற கேள்வி ஒவ்வொரு நெஞ்சிலும் எழாமல் இல்லை. நூல்கள் காகிதத்தால் தயாரிக்கப்படுகின்றன.காகிதம் நெருப்பின் உணவு. நெருப்போ ஆதிக்கவாதிகளின் கையிலிருக்கும் ஆயுதம்.

குழந்தையின் அறுக்கப்பட்ட குரல்வளையிலிருந்து பெருகும் குருதியைப்போல பாய்கிறது காலம்.அதில் அடித்துச் செல்லப்படுகிறது ஏதிலிகளின் வாழ்க்கை.அவர்கள் நூல்களைத் தெப்பங்களாக்கி தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அவலத்தின் எதிர்வினையாக எழுந்ததுதான் ’நூலகம்’ என்ற பெருங்கனவு.எரிக்கமுடியாத எண்வயத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் 2005 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஈழத்து எழுதாவணங்களை எண்வயப்படுத்தி உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் இணையத்தின்மூலம் கொண்டுசேர்க்கும் மாபெரும் பணி அது. அதில் இன்று பத்தாயிரம் நூல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.

எண்வயத் தொழில் நுட்பம் நமது வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் வியாபித்துவிட்டது. அது இல்லாமல் இன்று கலைப் பொருட்களின் பரிவர்த்தனை  சாத்தியமில்லை. இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில் நாம் எல்லோரும் எண்வயத்தொழில் நுட்பத்தால் பிணைக்கப் பட்டிருக்கிறோம். அச்சுத் தொழிலில் அது ஏராளமான சாத்தியப்பாடுகளை அடையாளம் காட்டியிருக்கிறது. அதையொட்டி உலகிலுள்ள பல நாடுகள் இன்று எண்வய நூலகங்களை ( டிஜிட்டல் லைப்ரரிகளை  ) உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றை ‘சுவர்கள் இல்லாத நூலகங்கள்’ என்று குறிப்பிடுகிறார் ’நூல்களின் வரலாற்றறிஞர்’ என அடையாளப்படுத்தப்படும் ராபர்ட் டார்ன்டன் என்ற சிந்தனையாளர்.

மங்கோலியாவில் தேசிய எண்வய நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது; டச்சுக்காரர்கள் 1470 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தம் நாட்டில் வெளியான அத்தனை அச்சுப் பிரதிகளையும் எண்வயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; ஃப்ரான்ஸ் அரசாங்கம் எண்வய நூலகம் ஒன்றை உருவாக்கும் திட்டத்துக்காக 750 மில்லியன் ஈரோக்களை ஒதுக்கியிருக்கிறது.ஜப்பான் அரசாங்கம் இரண்டே ஆண்டுகளில் தமது நாட்டில் இருக்கும் அனைத்து நூல்களையும் எண்வயப்படுத்துவதென அறிவித்து தீவிரமாக இதில் ஈடுபட்டிருக்கிறது.ஆஸ்திரேலியா,நார்வே எனப் பல்வேறு நாடுகளும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. இந்திய அரசும்கூட தேசிய எண்வய நூலகம் ஒன்றை உருவாக்கிகொண்டிருக்கிறது. பெங்களூரிலிருக்கும் ‘இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ்’ நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அந்தத் திட்டத்தில் சுமார் ஆறாயிரம் தமிழ் நூல்கள் தற்போது உள்ளன.  எண்வய நூலகங்களை உருவாக்குவதில் உலகநாடுகள் காட்டும் முனைப்பைப் பார்த்த அமெரிக்காவும் அதற்கான பணிகளை வேகவேகமாகச் செய்துவருகிறது. ’நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி ஆஃப் அமெரிக்கா ’ என்ற திட்டம் அறிவு சேகரங்களை அமெரிக்கர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொதுவாக்குவது என்ற நோக்கத்தோடு துவக்கப்பட்டிருக்கிறது.

நூல்களை எண்வயப்படுத்தி அவற்றை இணையத்தின்மூலம் வழங்கும் திட்டத்தை எந்தவொரு அரசாங்கமும் செயல்படுத்துவதற்கு முன்பே கூகுள் நிறுவனம் துவக்கிவிட்டது. உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் அச்சிடப்பட்ட நூல்கள் அனைத்தையும் எண்வயப்படுத்தவேண்டும் என்பதே கூகுளின் நோக்கம். சுமார் ஒன்றரைகோடி நூல்களை அது ’ஸ்கேன்’செய்து எண்வயப்படுத்தி யிருக்கிறது.ஆனால் சட்டரீதியான சிக்கல்களில் அந்தத் திட்டம் சிக்கிக்கொண்டு இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராமல் கிடக்கிறது.

ஆனால் இப்படியான அரசாங்க ஆதரவோ அல்லது கூகுள் நிறுவனம் போல வியாபார நோக்கமோ இல்லாமல் செயல்பட்டு வருகிறது ’நூலகம்’ திட்டம்  . இது மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.

எண்வயத் தொழில் நுட்பத்தில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் இ ரீடர்கள் சில காலாவதியாகும்போது உண்டாகும் பிரச்சனைகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். நூலகம் திட்டத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் இந்தத் தொழில்நுட்பப் பிரச்சனையை உணர்ந்திருப்பார்கள்.

இலங்கை போன்ற, இன முரண்பாடுகள் கூர்மைப்பட்டிருக்கும் சமூகங்களில் ஒரு இனம் தனது அறிவு சேகரங்களைக் காப்பாற்றி அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது எண்வயத் தொழில்நுட்பம் . அதைச் சரியாகப் புரிந்துகொண்டு ’நூலகம்’ திட்டம் சரியான காலத்தில் துவக்கப்பட்டிருக்கிறது. ’நூலகம்’எண்வய நூலகத்தில் நூல்கள், பத்திரிகைகள்,பிரசுரங்கள்,எழுத்தாளர்கள்,பதிப்பகங்கள்,நூல்வகை, பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எனப் பல்வேறு வகையான பகுப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.மலையக ஆவணகம், முஸ்லிம்ஆவணகம்,பெண்கள் ஆவணகம்,தலித் ஆவணகம் என்ற பகுப்புகளும் செய்யப்பட்டு வாசகர்களுக்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. எந்தவொரு நூலையும் எளிதாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கமுடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.இந்த எண்வய நூலகம் ஆரம்பிக்கப்படு ஐந்து ஆண்டுகளில் சுமார் எழுபது லட்சம் தடவைகளுக்குமேல் பார்வையிடப்பட்டது. துவக்கத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களே அதிகம் இந்த நூலகத்தைப் பார்வையிட்டார்களெனவும் இப்போதோ இந்தியாவிலிருந்துதான் அதிகமான பார்வையாளர்கள் வருகிறார்கள் எனவும் இதன் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர்.

நூலகம் திட்டத்தில் தற்போது ஈழத்து நூல்கள்மீதே அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது என்றாலும் அதை ஒட்டுமொத்தத் தமிழ் நூல்களுக்குமான வெளியாக விரிவுபடுத்தவேண்டும்.அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் தாமே முன்வந்து பங்களிப்புச் செய்யவேண்டும்.தற்போது தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் நடுவாந்தர மற்றும் சிற்றிதழ்களின் எண்வயப் பிரதிகளைப் பெற்று அவற்றையும் நூலகத்தில் சேர்க்கலாம். நூல்களை ஸ்கேன் செய்து இணையத்தில் ஏற்றுவதற்கு தமிழ்நாட்டிலிருப்பவர்கள் தன்னார்வத்தோடு முன்வரவேண்டும்.அதை எப்படிச் செய்வது என்பதை அவர்களது இணையதளத்தில் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள்.  ஈழத் தமிழ் நூல்களைக் கைவசம் வைத்திருப்போர் அவை குறித்த விவரங்களை ’நூலகம்’ திட்டத்தின் பொறுப்பாளர்களோடு பகிர்ந்துகொண்டால் யாழ் நூலகத்தைவிடவும் மிகப்பெரிய நூலகத்தை உருவாக்கிவிடமுடியும். தற்போது பத்தாயிரம் நூல்களைத் தொட்டிருக்கும்  ‘நூலகம்’ இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஒரு லட்சம் நூல்கள் கொண்டதாக வளரவேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒத்துழைத்தால் இந்தக் கனவை நனவாக்குவது பெரிய விஷயமாக இருக்காது.

-ரவிக்குமார்

2 Responses to எரிக்கமுடியாத நூலகம்

  1. நூலகங்களுக்கு ஆபது எப்பவும் இருந்து கொண்டெ இருக்கும். இணைய நூலகத்தையும் அழிக்க பலவழிகள் உண்டு.

  2. unmaikku yeandrum azhivu illai.( no one can destroy the true fact). one ultimate think in our hand that is hard work and courage. so, our aim will be succeed.