பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

Published on Author Noolaham Foundation

அழிவை எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு துணைநிற்க கூடிய ஆவணங்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எண்ணிம வடிவில் ஆவணப்படுத்துவதற்காக பிரித்தானிய நூலகத்தினால் (British Library) தொடங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தான் Endangered Archive Program (EAP). இதனடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல்வேறு நாடுகளில் EAP தொடரிலக்கத்துடன் பிரித்தானிய நூலக அனுசரணையில் நடைபெற்று வருகின்றது.

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheri இலிந்து மேற்கொள்ளப்படும் EAP 458 குழுவினர் நூலக நிறுவனத்திற்கு எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிகளை நூலக நிறுவனத்திற்கு வழங்க முன்வந்திருந்தனர். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த Dr. எம். கண்ணன், சமூகவியல் பிரிவினர், EAP 458 என்ற செயற்திட்ட Project Investicater ஆன Dr Zoe Headley மற்றும்  Co – Investicater ஆன S. Ponnarasu ஆகியோருடனும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி இந்தியாவுக்கான பயண ஏற்பாடுகளை செய்து கொண்ட நான் விசா, பயணச்சீட்டுக்களுடன் 23-05-2012 அன்று அதிகாலை 2.30 அளவில் நண்பர்களுடன் (காலை 06.05 மணி விமானத்துக்காக)  கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டேன். விமான நிலையத்தை ஏறத்தாழ 03.45 மணியளவில் அடைந்து, இதுவரையும் விமான நிலையத்தில் நான் தாண்டாத எல்லையை வேறுவிதமாக சொல்வதாயின் இலங்கையின் எல்லையை எனது ஆரம்ப சோதனைகளை முடித்து நாடு தாண்டிய எனது முதல் பிரயாணத்தை தனியே ஆரம்பித்து அனைத்துச் சோதனைகளும் முடித்து விமானமேறினேன்.

சென்னை விமானநிலையமும் எனக்குப் புதிய அனுபவமே. விமானத்துக்கு வெளியே வந்ததும் விமான நிலையம். அங்கு தமிழ் முகங்கள், தமிழ் பேச்சுக்கள், தமிழ் வழிகாட்டிப் பலகைகள் இதுகூட என் வாழ்வில் ஒரு புது அறிமுகம் தான். அனைத்துச் சோதனைகளையும் முடித்து வெளியேறி அங்கு உள்ள ஒரு வாடகை வண்டியின் உதவியுடன் தி.நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்குவதற்கான அறையொன்றை ஒதுக்கிக் கொண்டேன். ஒரு நாள் இரவு சென்னையில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலை விடுதியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் சென்று சொகுசு பஸ் ஒன்றின் மூலம் ECR பாதையூடாக பாண்டிச்சேரி பஸ் நிலையம் அடைந்தேன். பஸ் நிலையத்தில் இருந்து ஒரு வாடகை வண்டி மூலம் French Insitute இனை அடைந்தேன்.

French Institute of Pondicheri யை அடையும் வரை முற்றுமுழுதாக தனியான சுயாதீனமான பயணமே. செவிவழியாகக் தரப்பட்ட தகவல்களை மட்டுமே கொண்ட பயணம். சுவாரசியமான ஒரு சம்பவம் அதற்குள் நடந்தேறியது. செவிவழியாக எனக்குப் பலரால் தரப்பட்ட தகவல்களில் இந்தியாவில் ஆட்டோ, வாடகை வண்டி காரர்களிடம் ஏமாந்து விடாதே என பலரால் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆரம்பத்திலேயே நான் போகும் பாதையில் வாடகை வண்டி தேவைப்படும் இடங்களுக்கான தொகையை அறிந்து வைத்திருந்தேன். துரதிஸ்ட வசமாக நான் அங்கு செல்வதற்கு முதல் நாளில் இருந்து, எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு விட்டது. எனவே நான் அங்குள்ள வாடகை வண்டிகளை அணுகி நான் செல்லும் இடம் கூறி தொகையைக் கேட்டால் சற்று அதிகமாகவே சொல்லுவார்கள். நானும் ஏதோ அங்கு வழமையாக வந்து போகின்றவன் போல் பாசாங்கு செய்து, நான் அறிந்த தொகையை  கூறிவிடுவேன். இதுதான் தருணம் என்று நான் பயணித்த வாடகை வண்டி ஓட்டுனர்கள், நிறுத்தாமல் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துக், கண்டன கூட்டத்தில் பேசுவது போல் உரையாற்ற தொடங்கிவிடுவார்கள். பின்னர் ஒருவாறாக அவர்களை நிறுத்தி எனது பயணத்தை தொடரும் போது களைத்து விடுவேன்.

இனிதாக எந்தவித இடையூறுமின்றிk கடற்கரை சாரலில் உள்ள French institue, Pondichery யை அடைந்தேன். பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தொடர்பு கொண்டவுடனேயே EAP 458 அணியினரால் அன்பான வரவேற்புடன், அவர்களுடைய அலுவலகத்தைச் சென்றடைந்தேன். அனைவருடனான EAP 458 அணியினரின் அறிமுகத்துடன், என்னை இவ் பயிற்சி நிகழ்ச்சி திட்டத்துக்கான காரணகர்த்தா Dr. எம். கண்ணன் அவர்களைச் சந்திப்பதற்காக அழைத்து சென்றார்கள். பார்க்கும் போது சற்றுக் கடினமானவராகத் தென்பட்டாலும் அன்புடன் வரவேற்று, தானாகவே அந்நிறுவன விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாடிவீட்டில் எனக்கும் இடம் ஒதுக்கி தருவதற்கு ஏற்பாடுசெய்தார். அதுமட்டுமல்லாமல் நிறுவனப் புகைப்படப்பிடிப்பாளர் ரமேஸ்குமார் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி, புகைப்படக்கலை சம்பந்தமாக – ஆவணப்படுத்தல் நோக்கில் மேற்கொள்வதற்கான – பயிற்சிக்கு நேரம் ஒதுக்கித் தந்தார்.

அதன் பின்னர் EAP 458 அணியினர், French Institute of Pondicheri இனுடைய கட்டமைப்புக்களையும் சிறப்புகளையும் ஒவ்வொரு பகுதியாக கூட்டி சென்று விளக்கமளித்தனர். என்னை பொறுத்தமட்டில் முதன்முதலாக ஓர்ஆய்வு நிறுவனத்தை அதற்கு இருக்கவேண்டிய கட்டமைப்புகளுடன் பார்த்தேன். அதனைத் தொடர்ந்து எனது பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்துக்கான அட்டவணை எனக்குக் கையளிக்கப்பட்டது. அவ்வொழுங்குகள் தொடர்பாக EAP 458 அணியினரைச் செயற்படு களத்தில் இருந்து வழி நடாத்திச் செல்லும் Dr. கணேசன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. அன்றைய தினத்தை அறிமுகங்களுடன் நிறைவு செய்தோம். அதனைத் தொடர்ந்து வந்த 6 நாட்களும் நிகழ்ச்சித் திட்ட அட்டவணைப்படி, காலை 9 மணிக்கு காலை உணவு முடித்து ஆரம்பமாகும். பின்னர் 11 மணியளவில் அனைவரும் சேர்ந்து சென்று அருகில் உள்ள தேநீர்ச்சாலையில் சிற்றுண்டி அருந்துவோம். பின்னர் மதியம் 12.30 க்கு மீண்டும் அனைவரும் சேர்ந்து ஆனந்தபவனின் மதிய உணவை முடித்துக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அடையார் ஆனந்தபவனில் உண்போம். மீண்டும் 1.30 தொடக்கம் 3.30 வரை பயிற்சி. பின்னர் மீண்டும் சிற்றுண்டிச்சாலை. மீண்டும் 4.00 மணியில் இருந்து 5.30 வரை பயிற்சி. 5.30 க்கு நான் வாடிவீடு செல்ல, 6.00 மணியளவில் மீண்டும் அனைவரும் வாடிவீட்டில் ஒன்றிணைவோம். செயற்திட்டம் சார்ந்தும் வேறுவிடயங்கள் சார்ந்தும் காரசாரமான கலந்துரையாடல்கள் – கருத்து பரிமாறல்கள் 8.00 மணிவரை நீடிக்கும். அதன் பின்னர் மீண்டும் அனைவரும் சேர்ந்து இரவு உணவுக்காக வீதியில் நடந்து சென்று ஒன்றாக உணவருந்துவோம். மீண்டும் என்னை வாடிவீட்டில் கொண்டு வந்து சேர்த்து தான் வீடு சகலரும் செல்வார்கள்.

அங்கு நடைபெற்ற பயிற்சி, என்னைப் பொறுத்தமட்டில் மிகவும் விசேடமானது. நண்பர்களாக அனைவரும் பழகினர். ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பாக மிகவும் ஆழமாக விபரிப்பார்கள். எனக்குச் சந்தேகங்கள் வரவிடாமல் அவர்களே அனைத்தையும் முன்னரே கூறிவிடுவார்கள். என்னையும் ஏதாவது கேட்கும்படி வினாவுவார்கள். ஒவ்வொருவிடயங்களையும், தாங்கள் பின்பற்றும் முறைமை சார்ந்து எவ்வாறு செய்யலாம் என விரிவாகவே அறிவுறுத்துவார்கள். எம்மைச் செய்யவிட்டுப் பார்த்து, நாம் எவ்வாறு செய்கின்றோம் என்பதைக் கவனிப்பார்கள். தவறுகளைத் திருத்தம் செய்வார்கள்.

Dr. கணேசன் – இவர்தான் EAP 458 செயற்திட்டத்தை செயற்படு நிலையில் வழிநடாத்திச் செல்பவர். இவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக Dr. Zoe Headley அவர்கள் Project investicator ஆகவும் S. Ponnarasy அவர்கள்  Co.Investicator ஆகவும் உள்ளார்கள். நான் பயிற்சிக்காக சென்ற காலம் விடுமுறை காலம் என்பதால் துரதிஸ்டவசமாக இவர்கள் இருவரையும் என்னால் நேரில் சந்திக்கமுடியவில்லை. இருப்பினும் தொலைபேசிமூலம் எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தந்திருந்தார்கள். அடுத்ததாக செயற்திட்டத்தில் மூன்று பேர் Project Associate ஆக உள்ளனர். இவர்கள் மூவரும் செயற்திட்டம் சார்ந்து அனைத்து வேலைகளையும் செய்யகூடியவர்கலாக இருந்த போதும், ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்.

V. Krishnamoorthy ஐயா – செயற்திட்டத்தைத் பொறுத்தமட்டில் இவரே வயது முதிர்ந்தவர், அனுபவசாலி, பல்வேறு செயற்திட்டங்களில் இதுவரை ஈடுபட்டுள்ளர். இவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் 30க்கு மேல். ஆனால், இவரை நான் நண்பனாக பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தீராத ஆசை. நான் மட்டும் அல்ல அனைவரும் அவருடம் அப்படிதான் பழக வேண்டும் என்று விரும்புவார். இந்தச் செயற்திட்டத்தைப் பொறுத்தமட்டில் இவர்தான் களவேலைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். இவர்களுக்குக் களத்திலே முழுப்பொறுப்பையும் எடுத்து, ஆயத்தங்கள், ஆலோசனைகள் அனைத்தையும் செய்பவர். EAP 458 அணி களவேலைக்குச் சென்றால் அனைவரும் இவரை நம்பியே செல்லவார்கள்.

P. Chandran – இவர்தான் இந்தச் செயற்திட்டத்தின் புகைப்பட கலைஞர். அதேநேரம், அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவார். இச்செயற்திட்டம் சார்ந்து புகைப்படக்கலை சார்ந்த நுணுக்கங்கள் இவராலேயே எனக்கு விபரிக்கப்பட்டது. எனது வயதை  ஒத்தவர். பாண்டிச்சேரியைத் தனது மோட்டார் சைக்கிளில் சுற்றிக் காட்டியவர். “Penthaq”  என்பது ஒருவகை French Game. பாண்டிச்சேரியில் மட்டுமே காணப்படுகின்றது. அந்த விளையாட்டில் அவருக்கு தீராத வெறி. எனக்கும் அதனை அறிமுகப்படுத்தியவர்.

V. Muthukumar –  இவர் அங்கு கிடக்கும் ஆவணங்களை வாசிப்பதில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். அதாவது மிகவும் பழைய ஆவணங்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள், பயன்படுத்தும் சொற்கள் தற்காலப்பாவனையில் இருந்து பெரிதும் வேறுபட்டவை அவற்றை வாசிக்கும் கலை அறிந்தவர். அகழ்வாராய்ச்சியில் கலாநிதி பட்டபடிப்பை மேற்கொள்கின்றார். சுயமுயற்சியால் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். அண்மையில் இவர் தனது நண்பர்களுடன் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் பெறப்பட்ட பொருட்கள் சம்பந்தமாக இரு கட்டுரைகள் “The Hindu” பத்திரிகையில் வெளியாகி இருந்தது. ஆவணப்படுத்தும் நோக்கில், சேகரிக்கப்படும் ஆவணங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆலோசனைகள் உரியவர்களுக்கு இவராலேயே வழங்கப்பட்டு வருகின்றது.

Dr. கணேசன் அவர்கள் உண்மையிலேயே இந்த அணியை மிகவும் சிறப்பாக வழிநடாத்தி செல்வதற்கு பல உத்திகளைக் கையாள்கிறார். அனைவருடனும் நட்புறவுடன் மிகவும் இலகுவாகப் பழகுவார். அனைவரது வேலைகளிலும் வழிகாட்டல்களையும் அலோசனைகளையும் உதவிகளையும் மேற்கொள்வார். இச் செயற்திட்டத்தை – செயற்திட்டம் என்ற புள்ளி தாண்டி ஆய்வு நோக்கி கொண்டு செல்கிறார் என்பதும் ஒரு சிறப்பம்சம். பல்வேறு விடயங்கள் சார்ந்து ஆழமான அறிவுடையவர். இன்னும் அறியவேண்டும் என்ற ஆவல் மிக்கவர். களவேலைகள சம்பந்தமாக கிறிஸ்ணமூர்த்தி அவர்களிடம் அடிக்கடி சந்தேகம் கேட்டு தொல்லை கொடுப்பதாக ஐயா அவர்கள் நக்கலாக கடிந்து கொள்வார். இச் செயற்திட்டம், ஆர்முடுகிச் செல்வது முற்று முழுதாக இவராலேயே என நினைக்கிறேன்.

அடுத்ததாக, எனது பயிற்சி நிகழ்ச்சி திட்டம் திட்டமிட்டபடி தனித்தனிப் பிரிவுகளாக்கப்பட்டு Dr கணேசன் அவர்களின் ஒருங்கிணைப்பில், மிகவும் சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

* அறிமுகம் – ஒவ்வொரு பகுதியினதும் அறிமுகம் Dr. கணேசன் அவர்கள் சிறப்பாக மேற்கொள்ளப்படும். செயற்திட்டம் தொடர்பான அறிமுகம், அதன் பின்னணி, செயற்பாடுகள், பிரிவுகள், கண்காணிப்பு, தரமதிப்பீடு, செயற்திட்ட முகாமைத்துவம் போன்ற விடயங்கள் சம்பந்தமாக அவ்வப்போது தெளிவுபடுத்திக் கொண்டார்.

* புகைப்படக்கலை – இது தொடர்பாக ரமேஸ்குமார் அவர்கள் அடிப்படையில் இருந்து அனைத்துவிடயங்களையும் தெளிவுபடுத்தினார். அதில் உள்ள நுட்பங்கள் சம்பந்தமாகவும் தெளிவுபடுத்தினார்.

புகைப்படக்கலை மற்றும் DSLR ஒளிப்படக்கருவி போன்றவற்றை அறிமுகப்படுத்தி, ஆவணப்படுத்தல் சார்ந்து புகைப்படக்கலை – அது சார்ந்த சர்வதேச நியமங்கள் சார்பாகவும், அவற்றுக்குரிய காரணங்களும் தெளிவுபடுத்தப்பட்டது. ஆவணப்படுத்தலுக்கு RAW  என்ற Format இல் தான் படங்கள் எடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதனுடைய Megapixle ஏறத்தாழ 10 – அல்லது அதிலும் அதிகமாக உள்ள ஒளிப்படக்கருவிதான் பயன்படுத்த வேண்டும். EAP 458 செயற்திட்டத்தை பொறுத்தமட்டில் RAW Format இல் எடுக்கப்பட்ட படங்கள் Tiff வடிவில் மாற்றிச் சேமிக்கப்பட வேண்டும். இதற்கான காரணங்கள் எல்லாம் தெளிவுபடுத்தப்பட்டது. Nikkon, Cannon இரண்டுமே பயன்படுத்தப்படக் கூடியது. எமக்கு  Nikkon D 90 பயன்படுத்தும்படி ஆலோசனை வழங்கப்பட்டது. அதையே EAP 458 இலும்  EAP 951 செயற்திட்டத்திலும் பயன்படுத்தி கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக இக்கமராவுடன் 18-105mm lens வாங்கப்படும். ஆனால் எமக்கு 18-55mm lens உம் போதுமானது. ஒளிப்படக்கருவியைக் கணனியுடன் இணைத்துப் பயன்படுத்துவதற்கு Camer Control Pro – 2 எனும் மென்பொருள் அண்மையில் வெளிவந்தது. ( இம்மென்பொருள் இலவசமாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்ற போதிலும், பயன்படுத்தும் போது சில சிக்கல்களை கொடுக்கும் என்பதை பயிற்சியின் போது நேரடியாக அவதானிக்க முடிந்தது. ஆதலால், இம்மென்பொருளை பணம்கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது என ஆலோசனை வழங்கப்பட்டது.) அதனை விட View NXZ என்ற மென்பொருள் உம் வாங்கவேண்டியிருக்கும். அதன்மூலமே RAW வடிவில் எடுக்கப்பட்ட புகைப்படங்க்ளை பார்வையிட முடியும். அதனைவிட RAW Image editor, Text editor போன்ற மென் பொருட்களும் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும் (ABBYY).  புத்தகங்களை ஆவணப்படுத்தும் போது, பக்க ஒழுங்கில் மேற்கொள்வது கடினமானது. முதலில் ஒற்றை எண்களும் பின்னர் இரட்டை எண்களும் கொண்ட பக்கங்கள் Image ஆக்கப்பட்டு கணயில் Digits ஒழுங்குபடுத்தல் மூலம் பக்கங்கள், பக்க ஒழுங்கில் ஒழுங்குபடுத்தப்படும்.

எண்ணிமப் படுத்தல் செயல்முறை – ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு கருவியை போன்ற புதியதொரு கருவி, செயற்பாடுகளைச் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. அது ஒளிப்படக்கருவியில் பொருத்தப்பட்டு, ஒளிப்படக்கருவியும்  மடிக்கணனியும் தொடுக்கப்பட்டு ஆவணம் மடிக்கணனி ஊடாக பார்க்கப்பட்டு தெளிவாக தெரிய கூடிய வகையில் Camera manual mode  இல் தேவையான Setting செய்யப்படும். சரிபார்பதற்காக சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டு தகுதி சரிபார்க்கப்படும். மடிக்கணனிமூலம் இவ்விடயம் செய்யப்படும். தொடர்ச்சியாகப் பயிற்சி செய்வதன் மூலமே சிறப்பு தேர்ச்சி அடையலாம் என்பதால், அன்றும் ஏனைய நாட்களிலும் – ஒவ்வொரு நாளும் முதல் 1/2 மணித்தியாலங்கள சுயமாகப் பயிற்சி எடுத்து கொண்டேன்.

அடுத்ததாக முத்துகுமார் அவர்களால் EAP 458 செயற்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் எண்ணிமபடுத்தலுக்கு தயாராவதும் அதன் நீண்ட கால பாதுகாப்புக்குமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

சாதாரணமான ஆவணங்களின் ஆவணப்படுத்தல், ஆவணப்படுத்தல் செயல் முறை மூலம் விளக்கப்பட்டது. மிகவும் பழைய ஆவணங்கள், கையால் எடுக்கும் போது அல்லது மடிக்கும் போது உடைந்து விடும். இதற்குப் பலம் ஊட்டுவதற்கு அதன் இரண்டு பக்கங்களிலும் Japan tissue paper ஆல் Tollin எனப்படும் ஒரு வகை இரசாயனப்பொருள் பூசப்பட்டு ஒட்டப்படும். ஒட்டப்பட்ட பின்பு அது சற்றுப் பலமடையும். முறிந்த அல்லது கிழிந்த பக்கங்களை ஒட்டுவதற்கு Photo lamp sheet பயன்படுத்தப்படும். இது ஒட்டும் தன்மையுள்ளது. அதாவது உடைந்த பகுதிகளுக்கு உரித்து ஒட்டப்படும். இவ்வாறான ஆவணங்கள் வைத்திருக்கும் போது பாதுகாப்பதற்கு தடித்த மட்டையினால் கவர் ஒன்று அதன் அளவுக்கு ஏற்றாற் போல் செய்து அதனுள் வைத்து பாதுகாக்கப்படும். அதனைவிட பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு Peradide Chloro Benzine பயன்படுகின்றது. இதன் மணம் பூச்சிகள் நெருங்குவதைத் தடுப்பது ஓர் அநுகூலமாக உள்ள போதும், மனித சுவாசத்திற்கு உகந்தது அல்ல. இயற்கையான மஞ்சள் மற்றும் வேப்பம் விதைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலும் உகந்தது. இதனை விட பனையோலை ஏடுகள் மற்றும் செப்புதகடு போன்றவற்றை பாதுகாத்தல் தொடர்பான செய்முறை விளக்கங்களும் தரப்பட்டது.

இவற்றைத் தொடர்ந்து இறுதியாக கள வேலை அநுபவங்கள் தொடர்பாக கிருஸ்ணசாமி ஐயாவால் சுவாரசியமாய் கூறப்பட்டது. அவருடைய களவேலை சம்பந்தமான அனுபவங்களை,  கேட்டுக் கொண்டே இருக்கலாம். இச்செயற்பாட்டின் மூலம் அவர் பெற்றுள்ள அறிவு அளப்பரியது. இது தொடர்பான பல நுட்பங்களைத் தான் பெற்ற அனுபவத்தின் மூலம் பர்ந்து கொண்டார்.

இவ்வாறாக, ஆறே ஆறு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியானது, ஆறு ஆண்டுகள் தேடினாலும் பெற முடியாத ஒன்று என்பதை உணர்ந்து கொண்டேன். வெளியேறும் போது ஒரு கலாநிதி பட்டத்துக்கான அறிவை, இவர்கள் மூலம் பெற்று கொண்டது போல் உணர்ந்தேன். இப் பயிற்சி திட்டம் மூலம் நான் பெற்று கொண்ட விடயங்கள் ஏராளம். அவை ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தால் நிச்சயமாக என்னால் ஒரு முழுமையான புத்தகத்தையே எழுதிவிட முடியும். இது வரை என்வாழ் நாளில் நான் பெற்றிராத, கனவில் கூடக்காணாத ஓர் அநுபவம். நான் பெற்ற அனுபவங்களை ஏதாவது வகையில் அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல் நூலக நிறுவனத்தால் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வகையான செயற்றிட்டங்களில் ஈடுபடுவதற்கும் என்னால் ஆன பங்கை ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.