2010 இல் 3,109 மின்னூல்கள்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டமானது ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமமாக்கி இணையத்தினூடாகக் கிடைக்கச் செய்யும் செயற்றிட்டமாகும். அது 2010 இல் 3109 அச்சாவணங்களை ஆவணப்படுத்தியுள்ளது.

இது 2009 இல் ஆவணப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் 142 % ஆகும் என்பதோடு ஓராண்டில் ஆவணப்படுத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையுமாகும்.

2010 இல் நூலக நிறுவனமானது வாசிகசாலை எனும் செயற்றிட்டத்தினூடாக நேரடியாக மின்னூலாக்கத்தில் ஈடுபட்டது.  இதுதவிர நூலகத் திட்டத்துக்கான நிதியுதவிகளும் எதுவித தடைகளுமில்லாமல் வழங்கப்பட்டன.

2010 இல் நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டத்தினூடாக சரிநிகர், நிகரி, தினமுரசு, திசை, தினக்கதிர், புதிய பூமி, ஆதவன் போன்ற பத்திரிகைகள் பெருமளவில் ஆவணப்படுத்தப்பட்டன. நூலக நிறுவனம் நேரடியாக உருவாக்கிய மின்னூல்கள் அனைத்துக்கும் கூட நூலகத் திட்டத் தொடரிலக்கமே பயன்படுத்தப்பட்டது. ஒரே வேலை மீண்டும் செய்யப்படுவதைத் தவிர்ப்பதும் கூட்டுழைப்பை ஊக்குவிப்பதுமே இதற்கான காரணமாகும்.

2010 இல் நேரடியாக நூலக நிறுவன முயற்சியால் அல்லது நூலக நிறுவன அனுசரணையுடன் உருவாகிய ஈழத்து மின்னூல்களின் எண்ணிக்கை 3019 ஆகும். எஞ்சிய 90 மின்னூல்கள் மட்டுமே வேறு முயற்சிகளூடாக நூலகத் திட்டத்தில் இணைக்கப்பட்டன.